நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு

செல்வகண்ணன் இயக்கத்தில் அலெக்ஸ், அஞ்சலி நாயர் ஜோடியாக நடித்துள்ள நெடுநல்வாடை படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-
நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் “பொள்ளாச்சி சம்பவம் தூக்கத்தை கெடுக்கிறது” பட விழாவில் வைரமுத்து பேச்சு
Published on

தாத்தா-பேரனின் வாழ்க்கையை நெடுநல்வாடை படத்தில் செல்வகண்ணன் சொல்லி இருக்கிறார். ஒரு குடும்பத்தில் கிழவனும் கிழவியும் இருப்பது பாதுகாப்பு. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் படத்துக்கு தலைப்பாக வைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நுட்பமான விஷயங்கள் படத்தில் உள்ளன.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் தூக்கத்தை கெடுக்கிறது. நம்பி வந்த பெண்ணுக்கு துரோகம் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை.

அந்த மிருகங்களை சரிப்படுத்ததான் கலை. அந்தக் கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. நெடுநல்வாடை வணிக ரீதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி. படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும். 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை. இனி முழுமையாக திரைப்பட பாடல்கள் எழுதும் பணியில் ஈடுபட இருக்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com