“பொன்னியின் செல்வன் 2” பட பாடல் வழக்கு - ஏ.ஆர் ரகுமானுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்

காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
“பொன்னியின் செல்வன் 2” பட பாடல் வழக்கு -  ஏ.ஆர் ரகுமானுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்
Published on

டெல்லி,

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்‌ஷன் மீது காப்புரிமை மீறல் வழக்கு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி ஐகோர்ட்டு தனி நீதிபதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார். அதில், "வீர ராஜ வீரா பாடல் ஈர்ப்பினால் உருவாக்கப்பட்டதாக இல்லை. ஆனால் உண்மையில், அதன் உள்ளீடு, உணர்வுகள் மற்றும் பாடல் கேட்கும்போது ஏற்படும் தாக்கத்தில் சிவ ஸ்துதியை ஒத்துள்ளது. பாடலில் வேறு சில கூறுகளை சேர்ப்பது, பாடலை ஒரு நவீன இசையமைப்பைப் போல மாற்றி இருக்கலாம். ஆனால், அடிப்படை இசையமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. இது அசல் இசையமைப்பாளர்களின் காப்புரிமையை மீறும் செயலாகும். எனவே ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.2 கோடி அபராத தொகையாக டெல்லி ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் கட்ட வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் ஏ.ஆர் ரகுமான் தரப்பு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பாடகர் உஸ்தாத் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோரது அமர்வின் தலைமையில் ‘பொன்னியின் செல்வன் 2’ பட பாடல் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அப்போது பேசிய நீதிபதி “வீரா ராஜ வீரா பாடல் தாகர்பானி இசை மரபில் இருந்து உருவாக்கப்பட்டதாக ஏ.ஆர்.ரகுமான் ஒப்புக்கொண்டாலும் அந்த பாடல் முதல் முதலில் தாகர்பானி வம்சாவளிகளை சேர்ந்தவர்களால் இசைக்கப்பட்டதையும் அங்கீகரிக்க வேண்டும் . இந்த பாடலை யார் இசைக்க வேண்டும் என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பாடல் உருவாக்கத்திற்கான அடிப்படை அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த இசை சங்கீத சாஸ்திரங்களில் இல்லாமல் இருந்தால் இதனை அடிப்படையாக வைத்து ரகுமானால் அந்த பாடலை உருவாகியிருக்க முடியாது அல்லவா ? ரகுமான் ஒரு தொழில்முறை இசைக்கலைஞர். அவர்கள் பாரம்பரியமாக பாரம்பரிய இசையை வணங்குபவர்கள். உங்களுடன் அவர்கள் போட்டிக்கு வரவில்லை. அவர்கள் கொஞ்சம் மரியாதை மற்றும் அங்கீகாரத்தை விரும்புகிறார்கள்” என்று நீதிபதி பாக்சி கூறினார்.

ஏ.ஆர்.ரகுமான் ரூ 2 கோடியை டெல்லி ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் கட்ட உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com