

தெலுங்கு நடிகரும், டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டருமான கே. பரத் காந்த்(வயது 31) சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருடன் அவரது நண்பரும், ஒளிப்பதிவாளரும், யூடியூப் கலைஞருமான ஜி. சாய் திரிலோக்கும் பலியானார். நேற்று அதிகாலை ஐதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் ஆதிபட்லா அருகே விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ஆதிபட்லா போலீசார் தெரிவித்ததாவது:- ஷம்ஷாபாத் அருகே பரத் காந்த் காரை ஓட்டி சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பரத் காந்த் மற்றும் சாய் திரிலோக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் டிரைவர் சோர்வு ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.