

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர். இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெறும் பொழுது நேரில் வர இயலாதவர்களுக்காக தபால் வாக்குப்பதிவு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி தேர்தல் நடைபெறும் மையத்திற்கு வர இயலாதவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு அனுப்பப்பட்டு உள்ளது.
இதில், தபால் வாக்கு காலதாமதமுடன் வந்த நிலையில் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரமணா, பசுபதி ஆகியோர் ஓய்வு பெற்ற நீதிபதியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பத்மநாபனை சந்தித்து, தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு சரிவர சென்றடையவில்லை என தெரிவித்தனர்.