பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வருகிற ஜூன் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது.

ஆனால், ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதே போல் டீசரில் ராவணன் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து படக்குழு சார்பில் ராமநவமி அன்று படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 9-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது. 3-டியில் டிரைலர் திரையிடப்படும் திரையரங்குகளின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com