

பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் 1990-களில் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் மற்றும் 'நடனப்புயல்' பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' படத்தின் மூலம் இணைந்தார்கள். தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சார கனவு' ஆகிய படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக 'பேட்டராப்', 'ஊர்வசி ஊர்வசி', 'முக்காலா முக்காபுலா', 'வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும், பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் இன்றுவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன.'ஜென்டில்மேன்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே...' பாடலுக்கு பிரபுதேவா ஆடிய ஆட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
‘மின்சார கனவு’ படத்துக்கு பிறகு சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளனர். ‘மூன்வாக்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கி வருகிறார்.
படத்தில் பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள ‘மூன்வாக்’ திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபுதேவாவின் ‘மூன்வாக்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.