

சென்னை,
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய காதல் திரைப்படத்தில் நடிகைகள் பிரார்த்தனா நாதன் மற்றும் தேஜூ அஸ்வினி இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான ராம் நிதின் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி, தற்போது இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இளைய தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
இப்படத்தில் 'பார்க் கிங்', 'தலைவர் தம்பி தலைமையில்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரார்த்தனா நாதன் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக 'என்ன சொல்லப் போகிறாய்', 'பிளாக்மெயில்' உள்ளிட்ட படங்களில் நடித்த தேஜூ அஸ்வினி நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், "தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது. காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கமர்ஷியல் அம்சங்களும் இடம்பெறுகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.