

சென்னை,
'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். முதல் படத்திலேயே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கிய இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த பிரீத்தி முகுந்தன், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்திய நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது, இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படத்தில் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வா, கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஜூலை 10-ஆம் தேதி வெளியாகவுள்ள 'இதயம் முரளி' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற 'இதயம் முரளி' பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை பிரீத்தி முகுந்தன், "எல்லோரும் கத்துவதைக் கேட்கும்போது இதயம் லப்பு டப்பு என்று துடிக்கிறது. 'இதயம் முரளி' என் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் இரண்டு முக்கியமான திருப்புமுனைகள் உள்ளன. அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரீத்தி முகுந்தனின் இந்த நம்பிக்கையான பேச்சு, 'இதயம் முரளி' திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.