தமிழக அரசே... சாம்சங் தொழிலாளர்களை போராட விடு - இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை என ஊழியர்கள் போராட்டம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசே... சாம்சங் தொழிலாளர்களை போராட விடு - இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்
Published on

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே 'சாம்சங்' தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களுடனான சுமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசாரை தாக்கியதாக கூறப்படும் 9 பேரை அவர்கள் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று காலை போராட்டம் நடத்தும் இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் நாற்காலிகளை வருவாய் துறைனர் உதவியுடன் போலீசார் அதிரடியாக அகற்றினர். இருப்பினும் ஊழியர்கள் வழக்கம்போல போராட்டம் நடத்தினர்.

போலீசார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டம் நடத்திய சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் உள்பட 640 ஊழியர்களை போலீசார் கைது செய்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 640 ஊழியர்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்றும் போராட சென்ற சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படும் சாம்சங் ஊழியர்கள், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை.

தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்புக்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல் துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே... தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com