"லூசிபர் 3" படம் பற்றிய வதந்திக்கு பிருத்விராஜ் தரப்பு விளக்கம்

'லூசிபர் 3' படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது என்று பிருத்விராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், 'லூசிபர்'. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் திரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 'எல் 2 : எம்புரான்' என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்ததற்கு வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர். மோகன்லால் நடித்த 'எல் 2 எம்புரான்' படம் ரூ325 கோடி வசூலானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூன்றாம் பாகமான 'எல் 3: அஸ்ரேல்' படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, "லூசிபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.






