

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26ம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரபட்டு வந்தன.
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்பு அது நின்றுபோனது. சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயார் பேசியதாகக் கூறப்படும் ஒரு பழைய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.அந்த ஆடியோவில், ரஷ்மிகா மற்றும் நடிகர் ரக்சித் ஷெட்டி ஆகியோரின் முறிந்த நிச்சயதார்த்தம் குறித்தும், ரக்சித் குடும்பத்தினர் ரஷ்மிகாவை சினிமாவில் இருந்து விலகச் சொன்னது குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. ராஷ்மிகா தனது திருமண வாழ்வை சீர்குலைக்கும் வகையில் இப்படி அவதூறு பரப்பப்படுகிறது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது தனிப்பட்ட உரையாடல்களின் சிறு பகுதி நீக்கப்பட்டு தவறான நோக்கத்தில் பரப்பப்படுவதாக ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, டார்கெட் செய்து பழிவாங்குவது போன்ற செயல்களை செய்யத் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் சொல்லாத விஷயங்களை கதைகளாக சித்தரித்து வியூஸ்காக பெரிதுபடுத்தப்படுவதையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த விஷயங்கள் எல்லையை தாண்டியிருக்கிறது. எட்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த தனிப்பட்ட உரையாடல் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. இன்று, மற்றவர்கள் இதில் இழுக்கப்படும்போது இனி மவுனமாக இருக்க முடியாது. திருமணத்திற்குப் பிறகு எனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில், இது போன்ற செயல்கள் தேவையற்றவை. என்னை விமர்சிப்பதோடு நில்லாமல், என் குடும்பத்தினரையும் இதில் இழுத்துத் தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. அந்த ஆடியோவில் ஒரு சிறிய பகுதி வேண்டுமென்றே நீக்கப்பட்டு, சங்கடமான சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள். அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் ஊடகங்களும், இன்ப்ளுயன்சர்களும் உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.