''என்னைப்போல யாரும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது'' - பிரியங்கா சோப்ரா

தான் ஏன் தயாரிப்பாளராக விரும்பினேன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா விளக்கினார்.
சென்னை,
பாலிவுட்டில் இருந்து இப்போது உலகளாவிய நட்சத்திரமாக மாறி இருப்பவர் பிரியங்கா சோப்ரா. கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது மகேஷ் பாபு-ராஜமவுலி கூட்டணியில் உருவாகி வரும் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
இந்தப் படத்துடன், 'கிரிஷ்-4' படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பு மட்டுமில்லாமல், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் ஏற்கனவே பல படங்களைத் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் ஏன் தயாரிப்பாளராக விரும்பினேன் என்பது பற்றி விளக்கினார். பாலிவுட்டில் நுழைந்த இரண்டு ஆண்டுகளுக்குள், அங்குள்ள முழு சூழ்நிலையையும், திரைப்பட பின்னணி இல்லாதவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டதாக அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "பாலிவுட்டில் வெளியாட்கள் வெற்றி பெறுவது எளிதல்ல. நான் நிறைய கஷ்டங்களுக்குப் பிறகு வாய்ப்புகளைப் பெற்றேன். என்னைப் போல எந்த புதுமுகங்களும் கஷ்டப்பட கூடாது என்ற நோக்கத்தில்தான் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினேன்," என்றார்






