

சென்னை,
பிரியங்கா மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'ஏஜிஎஸ் 29' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்த நாளில் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.
பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.இவர் 2019-ஆம் ஆண்டு வெளியான 'ஒந்து கதே ஹெல்லா' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் நானியுடன் இணைந்து நடித்த 'கேங் லீடர்' திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதனை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர், மேட் இன் கொரியா போன்ற படங்களிலும் நடித்து வரவேற்பை பெற்றார்.
இவர் தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாக உள்ள 'ஏஜிஎஸ் 29' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'சக்ரா' படத்தை இயக்கிய இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக நகைச்சுவை மற்றும் இதர அம்சங்களுடன் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகன் இன்று தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'ஏஜிஎஸ் 29' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்த நாளில் வெளியாகியுள்ள இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. முதல்முறையாக பிரியங்கா மோகன் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த போஸ்டரில் பிரியங்கா மோகன் கண்கள் வித்தியாசமாக இருக்கிறது. இது என்ன மாதிரியான படம் என ரசிகர்களிடம் ஆவலை தூண்டியிருக்கிறது.