

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்கிற முரளி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் 126 படங்களை இயக்கிய மறைந்த ராம நாராயணனின் மகன் ஆவார். இதே அணி சார்பில் செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர்.ராஜேஷ் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 21 பேர் போட்டியிடுகிறார்கள். குறைந்த முதலீட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் நடிகர் சங்கம், பெப்சி, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியோருடன் சுமுகமாக பேசி தயாரிப்பாளர்களுக்கு பலன் கிடைத்திடவும், கியூப் கட்டணத்தை குறைத்திடவும், சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமை விற்பனையை தயாரிப்பாளர்களுக்கு எளிதாக்கி தரவும், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முழு மூச்சுடன் பாடுபடுவோம் என்று இந்த அணி அறிவித்து உள்ளது.