

கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ். தாணு, டி.ஜி. தியாகராஜன், முன்னாள் செயலாளர்கள் ஏ.எல். அழகப்பன், டி. சிவா, முன்னாள் பொருளாளர்கள் கஹஜாமைதீன், சந்திரபிரகாஷ் ஜெயின், வி.சி. குகநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், கமிலா நாசர், சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
“சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் சினிமா நகரம் உருவாக்குவதற்காக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தவிர மூத்த தயாரிப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விழா ஒன்றை நடத்த உள்ளோம். சலுகைகள் கொடுத்த முதல்வருக்கு அனைத்து சினிமா சங்கம் சார்பில் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.
‘சண்டியர்’ திரைப்படத் தலைப்பு தொடர்பாகப் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் “தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தால், அது 10 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் வசம் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தயாரிப்பாளரின் அனுமதியோடு வேறு யார் வேண்டுமானாலும் அந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பே ‘சண்டியர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், முன்பே அந்தப் பெயரில் படம் வெளியானபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை” என்றார்.
கமல்ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். இவர் சித்தா, வீரதீர சூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது.