தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ஜெய் மீது புகார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

நடிகர் ஜெய் ஏற்படுத்திய இடைஞ்சல்களால் ரூ. 1.50 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை அவர் திருப்பித் தரவேண்டும் என நடிகர் ஜெய் மீது தயாரிப்பாளர்கள் சரமாரி குற்றச்சாட்டு கூறி உள்ளனர். #Cinemanews #actorjai
தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ஜெய் மீது புகார் ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு
Published on

சென்னை,

பலூன் திரைப்பட தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண் பாலாஜி ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

எங்களுடைய பலூன் திரைப்படம் திட்டமிட்டதற்கு மாறாக, 9 மாதங்கள் தாமதமாக வெளியானது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய். இந்த படத்தின் நாயகனாக நடித்த அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இதனால் படவெளியீடு தள்ளிப்போனது. டப்பிங்கிற்கு கூட சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது, நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற அளவுக்கு நடந்து கொண்டார். இங்கு 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தோம். ஆனால் ஜெய் வரவில்லை. இதனால் ரூ.30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு ஜெய் சென்னை திரும்பி விட்டார். ஆனால் அது பொய் என்பது பின்னர் அஞ்சலி மூலமே தெரிய வந்தது. ஜெய் எங்களுக்கு ஏற்படுத்திய இழப்புக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அதை சமர்ப்பிக்க தயார்.

அவர் ஏற்படுத்திய பொருட் செலவினால், எங்களால் சொன்ன தேதியில் எதையும் முடிக்க முடியவில்லை. இறுதியாக நாங்கள் வாங்கிய கடன் அதற்கான வட்டி என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சம் அதிகமாக செலவானது.

தெலுங்கிலும் சொன்ன தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. தெலுங்கு வினியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் நிலைக்கு

தள்ளப்பட்டிருக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.1 கோடியே 50 லட்சத்தை உடனடியாக ஜெய் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே ஜெய் மற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com