விஜய் அரசியல் வருகை குறித்த கேள்வி; டி. ராஜேந்தர் அளித்த பதில்

என் மகன் என்னிடம் சொன்ன ஒரு காரணத்திற்காக நான் ஒரு முடிவு செய்தேன்.
சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார்.
இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய இந்த மாநாடு இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவில் இருந்தே மதுரையில் குவிய தொடங்கினர்.
விடியற்காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாக திரண்டனர். த.வெ.க. மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான டி. ராஜேந்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு டி. ராஜேந்தர் பதிலளித்து பேசும்போது, விஜய் என்னுடைய நண்பர். திரையுலகில் மறைந்து விட்ட விஜயகாந்த் எனது மிகப்பெரிய நண்பர். அவரது சட்டம் சிரிக்கிறது, கூலிக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவன் நான்.
ஆனால் அரசியல் தளத்தில் சில பத்திரிகைகள் செய்த வேலையால் எங்கள் இருவரின் நட்பு உடைந்தது. அதன்பின்னர் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவர் என் மகன் சிலம்பரசன். அப்போது என் மகன் என்னிடம் சொன்ன ஒரு காரணத்திற்காக நான் ஒரு முடிவு செய்தேன்.
எக்காரணம் கொண்டும் இந்த அரசியலுக்காக எனது திரையுலக நட்பை இழக்க கூடாது என்பதே அந்த முடிவு. அது சூப்பர்ஸ்டார் ரஜினியாகவோ, சூப்பர் ஆக்டர் கமலாகவோ, நம்முடைய இளைய தளபதி விஜயாகவோ இருக்கலாம். என்னுடைய அரசியலுக்காக நான் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று டி. ராஜேந்தர் கண்கலங்கியபடி கூறினார்.
டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் ‘உயிருள்ள வரை உஷா’. 1983-ல் வெளியாகி, ‘உயிருள்ள வரை உஷா’ வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிறது.
தன்னுடைய படங்களில், இயக்கம், எழுத்து பணிகள், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் என பன்முக தன்மையை வெளிப்படுத்தும் வகையில் செயல்படுபவர் என்ற பெயர் பெற்றவர் டி. ராஜேந்தர். தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த இந்த படத்தில், தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார்.
படம் முடிந்து ரிலீசாவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதிலும், வெளியான பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கும் ஹிட்டானது.,இதன் பின்னர் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில் ‘உயிருள்ள வரை உஷா’ படம் 4கே தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்று டி.ராஜேந்திரன் கூறியுள்ளார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






