

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் காஸ்டிங் ஏஜெண்ட்கள் குறித்து விளக்கமளித்துள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ராஜ்கமல் நிறுவனம் தற்போது ரஜினியின் தர்மன், சிவகார்த்திகேயனின் சேயோன், கமல் ஹாசன் நடிக்கும் சண்டியர் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில் அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளது.