

சென்னை,
இன்று நடிகர் ராகவா லாரன்சின் பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது ருத்ரன், துர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து அவர் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை, டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். டைரக்டர் கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இந்த புதிய படத்தில் ராகவா லாரன்சுடன் அவர் தம்பி எல்வினும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிரடி ஆக்சன் கலந்த கமர்சியல் திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
மேலும், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'அதிகாரம்' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராகவா லாரன்சின் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.