

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதொ, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத்சிங் கைவசம் இப்போது இந்தியன்-2, அயலான் ஆகிய படங்களும் உள்ளன. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''உடற்பயிற்சி என்பது என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம்.
நீ ஒன்றும் குண்டாக இல்லையே உடலை ஏன் இப்படி வருத்திக்கொள்கிறாய் என்று பலரும் என்னை கேட்கிறார்கள். உடற்பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்பை குறைத்துக்கொள்வதற்கு என்று யார் கூறியது? உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாய் இருக்க உடற்பயிற்சி செய்கிறேன். ஒரு நாள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குறை தெரியும். நீங்களும் உங்களுக்காக உடற்பயிற்சி செய்யுங்கள்.
அப்போது ஆரோக்கியம், ஆனந்தம் சொந்தமாகும். அதற்காக நாள் முழுவதும் ஜிம்மிலேயே கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லுங்கள். ஜிம்மில் செய்ய வேண்டிய வேலையை பச்சை பசேல் என்ற தோட்டங்களில் கூட செய்யலாம். உடற்பயிற்சியால் மனம் ஆனந்த தாண்டவம் ஆடும். அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஆனந்தம் தெரியும்" என்றார்.