''லவ்லி'' படக்குழுவுக்கு ''நான் ஈ'' பட தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ''நான் ஈ''.
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ''நான் ஈ'' படத்தை காப்பியடித்ததாக ''லவ்லி'' படக்குழுவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ''நான் ஈ''. ஈ யை மையாக வைத்து நகரும் இப்படத்தில் நானி, சமந்தா, கிச்சா சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதற்கிடையில், அதேபோல ''ஈ'' யை மையப்படுத்தி மலையாளத்தில் உருவான படம் லவ்லி. இத்திரைப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ''லவ்லி'' படக்குழுவுக்கு ''நான் ஈ'' பட தயாரிப்பாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். படத்தில் பயன்படுத்தப்பட்ட ''ஈ'' யின் உருவ அமைப்பு ''நான் ஈ'' படத்தில் பயன்படுத்தப்பட்டது எனவும் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, லவ்லி பட இயக்குனர் கூறுகையில், '' ''நான் ஈ'' பட தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ''லவ்லி'' நடிகை உன்னி மாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்துதான் படத்தில் வரும் ''ஈ''யின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது'' என்றார்.






