

சென்னை
உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அரசியலுக்கு வாங்க தலைவா, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரசிகர்கள் சிலர் கூறுகையில், தலைவரின் (ரஜினிகாந்த்) தற்போதைய திடீர் அறிவிப்பு எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் சரி, கட்சி தொடங்கியாக வேண்டும். தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும். தலைவர் அரசியலுக்கு நிச்சயம் வர வேண்டும் என்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ரஜினிகாந்த் வீடு முன்பு திரண்டிருந்த ரசிகர்களை கலைந்து போக செய்தனர். ரசிகர்களை அப்புறப்படுத்திய போலீசார் பின்னர் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்தனர். போயஸ் கார்டன் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆண்டாள் தெருவை சேர்ந்த ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர் பரமசிவம் என்பவர், ரஜினியின் அறிவிப்பை கேட்டு ஆவேசத்தில், நந்தி கோவில் தெரு அருகே நடிகர் ரஜினிகாந்தின் பேனரை திடீரென தீவைத்து எரித்தார். அவரது இந்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* 2017 டிசம்பர் 31-ந்தேதி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.
* 2018 ஜனவரி 1-ந்தேதி, ரசிகர் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க ரஜினி மன்றம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
* 2018 ஜனவரி 6-ந்தேதி, ரஜினி மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக பெயர் மாற்றப்பட்டது.
* 2018 பிப்ரவரி 24-ந்தேதி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று பரபரப்பாக பேசினார்.
* 2018 மார்ச் 12-ந்தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆர். வழங்கியது போன்ற நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக கூறினார்.
* 2019 பிப்ரவரி 17-ந்தேதி, சட்டசபை தேர்தல்தான் எங்களது இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று ரஜினிகாந்த் அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.
* 2019 நவம்பர் 22-ந்தேதி, 2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
* 2020 மார்ச் 13-ந்தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை; முதல்-அமைச்சர் ஆகமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்தார்.
* 2020 நவம்பர் 31-ந்தேதி, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
* 2020 டிசம்பர் 3-ந்தேதி, ஜனவரியில் கட்சி தொடக்கம். 31-ந்தேதி அதுபற்றி அறிவிக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டார்.
* 2020 டிசம்பர் 14-ந்தேதி, அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றார்.
* 2020 டிசம்பர் 25-ந்தேதி, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
* 2020 டிசம்பர் 27-ந்தேதி, 3 நாள் சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்பினார்.
* 2020 டிசம்பர் 29-ந்தேதி, நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.