‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
சென்னை,
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் 'கடல்' படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது கவுதம் ராம் கார்த்திக் 'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கத்தில் ‘ரூட்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் நடிகை பவ்யா திரிகா, கவுதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். பவ்யா திரிகா 'ஸ்ட்ரீ 2' படம் மூலம் பிரபலமானவர். மேலும் பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இந்த நிலையில், 'ரூட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
நடிகர் கவுதம் ராம் கார்த்திக், இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் சார் எங்கள் 'ரூட்' திட்டத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டது, உண்மையிலேயே ஒரு நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. 2026-ஐ தொடங்க இதைவிட ஒரு அற்புதமான வழி இருக்க முடியுமா! உண்மையிலேயே பெரும் பாக்கியமாகவும் நன்றியுடனும் உணர்கிறேன்! அவரது ஆசீர்வாதங்களுடன், 'ரூட்' ஒரு காலத்தால் அழியாத பயணத்தில் அடியெடுத்து வைக்கிறது!” என தெரிவித்துள்ளார்.






