ரஜினிகாந்தின் ஓட்டல் வாடகை கட்டிட விவகாரம்: தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

கோடம்பாக்கத்தில் உள்ள கட்டிடம் தொடர்பான வழக்கில் ரஜினிகாந்திற்கு சாதகமாக தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ரஜினிகாந்தின் ஓட்டல் வாடகை கட்டிட விவகாரம்: தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் சாலையில் தனக்கு சொந்தமான கட்டிடத்தை வசந்தபவன் ஓட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டிடத்துக்கு 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 56 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் சேவை வரி செலுத்தம்படி, ரஜினிகாந்துக்கு சேவை வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் எம்.அஜீத்குமார், நீதித்துறை உறுப்பினர் டி.வி.அஜயன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.

அப்போது ரஜினிகாந்த தரப்பில் வக்கீல் டி.டி.ரவிச்சந்திரன் ஆஜராகி, "1994-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் ஓட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டிடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவை வரிகள்துறை தரப்பு வக்கீல் ரீனா, ஒட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கி வந்ததால், சேவை வரி விலக்கு பெற முடியாது” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் உறுப்பினர்கள், “ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக இயக்கப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஓட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும். அவற்றை தனித்தனி கட்டிடமாக கருத முடியாது. எனவே, வரி விலக்கு பெற ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது. சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com