

சென்னை,
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘தர்மன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் சுந்தர்.சி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் விலகியதால், ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் அவரும் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க ஒப்பந்த செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் இன்று(ஜூன் 24) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு ‘தர்மன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.