

சென்னை,
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். அதனால் ‘தலைவர் 173’ படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் ஹாலிவுட் படமான 'தி அவுட்பிட்' படத்தின் தழுவலாக இருக்கும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, ‘தலைவர் 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான் பாசில் ஜோசப் ரஜினிக்கு மகனாக நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் 20 முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகள் முடிந்ததும் ‘தலைவர் 173’ படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், ஷோபனா, பசில் ஜோசப் ஆகியோர் இணைகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.