

சென்னை,
தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர்.
இது ரஜினிகாந்துக்கு 168-வது படம் ஆகும். கிராமத்து பின்னணியில் குடும்ப பாங்கான கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாகவும், ரஜினிகாந்திற்கு மனைவிகளாக குஷ்புவும், மீனாவும் நடிப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாக வருகிறார் என்றும் கூறப்பட்டது.
நயன்தாரா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக பேசப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருக்குமானால் நயன்தாரா வக்கீலாக நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். ஆனாலும் இந்த தகவல்களை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. யூகமாக பல்வேறு பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.