‘தசரதரிடம் விடைபெறும் ராமர்...’ - புதிய போஸ்டர்களை வெளியிட்ட ‘ராமாயணா’ படக்குழு

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
‘தசரதரிடம் விடைபெறும் ராமர்...’ - புதிய போஸ்டர்களை வெளியிட்ட ‘ராமாயணா’ படக்குழு
Published on: 

மும்பை,

வால்மீகி எழுதிய ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இந்த படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த படத்தின் இந்தி தியேட்டர் விநியோக உரிமையை 'தர்மா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் சுமார் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

100 கோடி பார்வைகளை பெற்ற “ராமாயணா” டிரெய்லர்

‘ராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை 30-ந்தேதி காலை 4:15 மணிக்கு (பிரம்ம முகூர்த்தத்தில்) வெளியானது. பிரமாண்ட விஷுவல் எபெக்ட்ஸ், வலுவான பின்னணி இசை, கதாபாத்திரங்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

‘ராமாயணா’ படத்தின் “ஜெய் ஜெய் ராம்” பாடலின் இந்தி பதிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் தமிழ் பதிப்பு சமீபத்தில் வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள தமிழ் வரிகளுக்கு, பாடகி சின்மயி, ஹரிசரண் இணைந்து பாடியுள்ளனர்.

படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு

இதைத் தொடர்ந்து ‘ராமாயணா’ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்தில் ராவணனாக உருவெடுத்துள்ள யாஷின் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதே போல், ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, தசரதராக நடிக்கும் அருண் கோவில் ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ‘ராமாயணா’ படக்குழு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தந்தை, கடமைக்கு கட்டுப்பட்ட மகன். இறுதியாக விடைபெறுகிறோம் என்பது இருவருக்கும் தெரியாது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

முதல் போஸ்டரில் ராமர் வனவாசம் செல்வதற்கு முன்பு தனது தந்தை தசரதரிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சியும், அடுத்த போஸ்டரில் மறைந்த தனது தந்தை தசரதரின் அஸ்தியை ராமர் ஆற்றில் கரைக்கும் காட்சியும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com