37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் “கரகாட்டக்காரன்”

மதுரை தியேட்டரில் மட்டும் ‘கரகாட்டக்காரன்’ படம் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
37 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸாகும் ராமராஜனின் “கரகாட்டக்காரன்”
Published on: 

ராமராஜன் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

ராமராஜன் - கனகா நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. கிராமத்து மண் வாசனையில், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பட்டி.. தொட்டி.. எங்கும் பட்டையை கிளப்பியது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் இன்றும் தமிழின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

இளையராஜா இசை

இசைஞானி இளையராஜா இசையில், ‘மாங்குயிலே பூங்குயிலே.. இந்த மான் உந்தன் சொந்த மான்.. ஊருவிட்டு ஊரு வந்து... குடகுமலை காற்றில் ஒரு..’ என படத்தில் இடம் பெற்ற 9 பாடல்களும் சூப்பர் ஹிட். கவுண்டமணி - செந்தில் காமெடியும் 37 ஆண்டுகள் கழித்தும் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நடிகை தேவிகாவின் மகளான கனகா, ‘கரகாட்டக்காரன்’ படத்தில் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

மதுரையில் ஒரு தியேட்டரில் மட்டும் ‘கரகாட்டக்காரன்’ படம் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1989-ம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு விருது இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது. கரகாட்டக்காரனை தொடர்ந்து நடிகை கனகா பிசியாக நடிக்கத் தொடங்கினார்.

விரைவில் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘கரகாட்டக்காரன்’ நவீன டிஜிட்டல் முறையில் மெருகூட்டல் செய்யப்பட்டு 37 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப் மற்றும் டிடிஎஸ் ஒலி துல்லியத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ரூ.35 லட்சத்தில் உருவான ‘கரகாட்டக்காரன்’

சுமார் ரூ.35 லட்சத்தில் உருவாக்கப்பட்டு திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டு சாதனை புரிந்தது. தயாரிப்பாளருக்கு பன்மடங்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது ‘கரகாட்டக்காரன்’. தற்போது இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X