

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான ‘ராமாயணா’ திரைப்படம் கடந்த நவம்பர் 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ராமாயணா’ படத்தின் 7 நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 7 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.650 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. ‘எல்லைகளைக் கடந்த கதைகள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில், 137 நாடுகளில் இருந்து 1,900-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் திரைப்படப் பிரிவில் 18 மொழிகளைச் சேர்ந்த 76 படங்கள் இடம்பெறுகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் திரைப்படங்களுக்கான சிறப்புப் பிரிவில் இந்தியாவின் ‘ராமாயணா’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது.