

இந்தியக் கதையை, உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ‘ராமாயணா’ படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளதாக நடிகர் யாஷ் கூறியுள்ளார்.
வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த புதிய டிரெய்லரில் ராமர் மற்றும் ராவணன் இடையிலான மோதல் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராமராக வரும் ரன்பீர் கபூர், தீமையை அழித்து ராவணனை வீழ்த்துவதாகச் சபதம் எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லாததாக விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ‘ராமாயணா’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது.
இதில் யாஷ் கலந்து கொண்டு பேசுகையில் “சமூக ஊடகங்களில் மக்கள் தொடர்ந்து விவாதிப்பதை பார்க்கிறேன். விஎஃப்எக்ஸ் சரியில்லை, இசை ஏன் இப்படி இருக்கிறது, இந்த கதாபாத்திரத்தில் இந்த நடிகர்தான் நடித்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் உலக அரங்கில் தடம் பதிக்க முயற்சிக்கும் போதெல்லாம், நமக்குள்ளேயே சண்டையிடத் தொடங்கிவிடுகிறோம். இது ஆங்கிலேயர்கள் நம்மிடம் கையாண்ட பிரிவினை மற்றும் சூழ்ச்சியைப் போல் இருக்கிறது.
நாம் இப்படி நமக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டால், உலக அரங்கில் ஒரு சவாலாக நம்மால் ஒருபோதும் மாற முடியாது. நமது நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு ராமர் கோயில் இருக்கிறது. ராமர் நம் அனைவருக்கும் உரியவர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் அல்லது கேரளா என எந்த மாநிலமாக இருந்தாலும், நமது கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல ஒருவர் நேர்மையான முயற்சியை மேற்கொள்ளும்போது, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நோக்கம் சரியாக இருக்கும்பட்சத்தில், நமக்குள் இருக்கும் சண்டைகளை மறந்து, ஒரு திரையுலகமாக ஒன்றிணைந்து அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
சர்வதேச அளவில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன, இந்தியா மட்டுமே போதாதா என்று பலர் கேட்கிறார்கள். நமது கலாச்சாரத்தின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு, அதே சமயம், நாம் எத்தகைய ஆற்றல் கொண்டவர்கள், உண்மையில் நாம் யார் என்பதை உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும். இது வெறும் திரைப்படம் எடுப்பது மட்டுமல்ல, ஒரு இந்தியக் கதையை, உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் முயற்சி” என்றார்.