

சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியாவில் ‘ராமாயணா’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம், அடுத்த காலாண்டிற்குள் சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு முக்கிய சர்வதேச சந்தைகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சீன அரசிடம் தணிக்கை கோரி ஏற்கனவே படக்குழு விண்ணப்பம் சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் சீன துணைத் தலைப்புகளுடன் ஹாங்காங்கில் வெளியாகிவிட்டது. இதற்கிடையில், உலகம் முழுவதும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியான அன்றே இங்கிலாந்து, வட அமெரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 30 மில்லியன் டாலர்களைக் கடக்கும் முதல் இந்தியத் திரைப்படம் ‘ராமாயணா’ என்ற பெருமையையும் பெறும் பாதையில் உள்ளது. தொடர்ந்து நவம்பர் 19ம் தேதி ‘ராமாயணா’ திரைப்படம் பிரேசில், இத்தாலி, உக்ரைன் மற்றும் ஹங்கேரியில் வெளியிடப்பட உள்ளது. நவம்பர் 20 அன்று போலந்திலும், நவம்பர் 26 அன்று அர்ஜென்டினா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் செக்கியாவிலும் வெளியாகிறது.
நிதேஷ் திவாரியின் ‘தங்கல்’ திரைப்படம், இந்தியாவில் ஈட்டிய தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக, சுமார் 1,305 கோடி ரூபாய் வசூலித்து சீனாவில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.