சீதை சண்டையிடுவது போல் காட்டியது ஏன்? - “ராமாயணா” இயக்குநர் விளக்கம்

‘ராமாயணா’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சீதை சண்டையிடுவது போல் காட்டியது ஏன்? - “ராமாயணா” இயக்குநர் விளக்கம்
Published on: 

சீதையை போர் வீராங்கனையாக காட்டியதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளதாக ‘ராமாயணா’ பட இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ராமாயணா’ படம் 9 நாட்களில் உலகளவில் ரூ.1100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீதை போர் வீராங்கனை- இலக்கிய ஆதாரங்கள்

சீதையை போர் வீராங்கனையாக காட்டியதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளதாக ‘ராமாயணா’ பட இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.

“சமஸ்கிருதத்தில் உள்ள ‘அத்புத ராமாயணம்’, ஒடியாவின் ‘பிலங்கா ராமாயணம்’ ஆகிய படைப்புகள், சீதையை பொறுமையின் வடிவமாக மட்டும் பார்க்காமல், பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும், துடிப்பான போர் வீராங்கனையாகவும் சித்தரிக்கின்றன. சீதை வெறும் சகிப்புத்தன்மை உடையவராக மட்டும் இல்லாமல், தீவிரமான சக்தியின் வெளிப்பாடாகவும், ராமன் இயலாத நிலையில் மஹாகாளியின் உருவம் எடுத்து ஆயிரம் தலைகள் கொண்ட சகஸ்ர ராவணனை வதம் செய்பவராகவும் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று ‘ராமாயணா’ பட இயக்குனர் விளக்கமளித்தார்.

இது நவீனகால பெண்ணியக் கருத்து அல்ல என்றும், இந்தியாவின் பல்வேறு இதிகாசப் பாரம்பரியங்களில் சீதையின் போர் குணங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாகவும் ‘ராமாயணா’ பட இயக்குநர் கூறினார்.

X