

மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதியாக ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி திகழ்கிறார்கள். ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் ரூ.1,000 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். இதில் சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். அதேபோல் ஆலியா பட்டும் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மும்பையில் இருந்த தங்களது பழைய வீட்டை புதுப்பித்து, மாதம் ரூ.11 லட்சம் வாடகைக்கு 5 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.32 கோடி வருமானம் கிடைக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் புதிய குடியிருப்புகளை வாங்கி வாடகைக்கு விடவும் இந்த நட்சத்திர தம்பதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சுமார் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்ட வீட்டில் ரன்பீர் - ஆலியா தம்பதி குடியேறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.