காந்தாரா சர்ச்சை: நடிகர் ரன்வீர் சிங்கை கண்டித்த கர்நாடக ஐகோர்ட்

காந்தாரா சர்ச்சை வழக்கில் விசாரணை நடத்தப்படும் வரை ரன்வீர் சிங்குக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.
காந்தாரா சர்ச்சை: நடிகர் ரன்வீர் சிங்கை கண்டித்த  கர்நாடக ஐகோர்ட்
Published on

கடந்தாண்டு கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘காந்தாரா’ பட நாயகன் ரிஷப் ஷெட்டி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் காந்தாரா படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங், அதுபோல நடித்தும் காட்டினார். இதுபெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது குறித்து ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய ரன்வீர் சிங்கின் மனுவை கர்நாடக ஐகோர்ட் இன்று விசாரித்தது . விசாரணையின்போது நீதிபதி ரன்வீர் சிங்குக்கு கடுமையான வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

நீதிபதி, “நீங்கள் ஒரு நடிகராக இருப்பதால், பலரின் மீது செல்வாக்கு செலுத்துகிறீர்கள். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் நாக்கை விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியாது. இணையம் ஒருபோதும் எதையும் மறக்காது என்பதை நீங்கள் மறந்துவிடலாம்.நடிகர் மேடைகளில் ஏறி இதையெல்லாம் செய்ய முயற்சிக்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் மத உணர்வு மதிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மாநில மக்களின் உணர்வுகளை யாராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டீர்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் கூறவில்லை. வார்த்தைகள் திரும்பப் பெறப்படலாம், ஆனால் இணையத்தில் உள்ள வீடியோக்களை திரும்பப் பெற முடியாது” என்று நீதிபதி கூறினார்.

ரன்வீர் சிங் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ‘ரன்வீர் சிங்கின் கருத்துகள் முற்றிலும் உள்நோக்கமற்றவை. அவர் இதனால் ஏற்பட்ட எந்தவொரு காயத்தையும் நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார்’ என்று கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கு மார்ச் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் வரை ரன்வீர் சிங்குக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com