வசூல் வேட்டையில் ரன்வீர் சிங்கின் "துரந்தர்" திரைப்படம்

’துரந்தர்’ படம் வெளியான ஒரு மாதத்தில் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘துரந்தர்’. 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், ’துரந்தர்’ படம் வெளியான ஒரு மாதத்தில் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.968 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால், இப்படம் விரைவில் ரூ.2000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






