பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் "ரசவாதி" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்


பிரான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ரசவாதி படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
x
தினத்தந்தி 1 Jun 2025 3:02 PM IST (Updated: 1 Jun 2025 4:30 PM IST)
t-max-icont-min-icon

அர்ஜுன் தாஸ் நடித்த 'ரசவாதி' திரைப்படம், பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில், 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவராக நடித்திருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம். சுந்தர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 'ரசவாதி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் தமன் மற்றும் இயக்குநர் சாந்தகுமார் கூட்டணியும் மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைக் கடந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்த வண்ணமுள்ளது. இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது நியூ ஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பிரான்சில் நடைபெறும் நைஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகளில், 'ரசவாதி' படம் 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, அதன் இயக்குநர் சாந்தகுமார், தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story