

ஐதராபாத்,
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்ப்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று மில்லியன் கணக்கில் பார்வைகளை கடந்தன. தொடர்ந்து, ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிலும் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், “லக்கி” என்ற சிறுமி, தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என வருத்தத்துடன் பகிர்ந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், “நாமும் ரசிகர்கள் தானே, எங்களை அழைத்திருக்கலாம்” என்ற அவளது மழலைப் பேச்சு பலரையும் கவர்ந்தது.
இந்த வீடியோ விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்கு சென்றதும், அவர் உடனடியாக பதிலளித்து, சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சந்திப்பதாக தெரிவித்தார். மேலும், “உனக்கு என்ன பிடிக்கும் என்று சொல், உனக்குப் பிடித்ததை எல்லாம் ஏற்பாடு செய்கிறோம்” எனவும் கூறினார்.
அதன்படி, ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில், லக்கி என்ற சிறுமியை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா சந்தித்தனர். அவர்களுக்கு சிறப்பு விருந்து அளித்து, அன்புடன் நேரம் செலவிட்டதுடன், சிறுமியுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றையும் பதிவு செய்தனர். இந்த மனதை நெகிழச்செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.