

ஐதராபாத்,
‘ரணபாலி’ படத்தில் ஏற்ற ஜெயம்மா கதாபாத்திரத்தின் தாக்கத்தால், ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கெனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக ‘ரணபாலி’ திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டா போராளி ரணபாலியாகவும், ராஷ்மிகா அவரது மனைவி ஜெயம்மாவாகவும் நடித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பின்னணியில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘ரணபாலி’ படத்தில் தான் ஏற்று நடித்த ஜெயம்மா கதாபாத்திரம் அளித்த தாக்கத்தால், 400 ஏழைக் குடும்பங்களுக்கு உதவ ராஷ்மிகா மந்தனா முன்வந்துள்ளார். அதன்படி, 400 குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார். அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், அடுத்த ஓராண்டுக்கு இந்த உதவித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காகச் செலவிடும் தொகையைச் சேமித்து, பிற தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது இந்த முயற்சி குறித்து ராஷ்மிகா மந்தனா கூறுகையில், “உதவி செய்வதற்குப் பெரிய தொகையோ, மிகப்பெரிய முயற்சியோ தேவையில்லை. சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். என்னுடைய இந்தச் செயல் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தால், நிஜ வாழ்க்கையிலும் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ முன்வந்துள்ள ராஷ்மிகா மந்தனின் இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.