

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
‘தாய் கிழவி’ படம் 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகுமார் தாய் கிழவி படத்தை பார்த்துவிட்டு நடிகை ராதிகாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவகுமார் அண்ணா, நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் அவர் நடிகர் சிவகுமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் சிவகுமார் கைப்பட எழுதிக் கொடுத்த பாராட்டையும் புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.
சிவகுமார் எழுதி கொடுத்த பாராட்டில், "நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு ரத்தக் கண்ணீர், அவர் மகள் ராதிகாவுக்கு தாய் கிழவி. வாழ்த்துக்களுடன் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பிருந்தா குடும்பத்தினர்," என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.