கதைக்கு தேவையென்றால் எதையும் செய்ய தயார்: நடிகை மெஹ்ரின் பிர்சாடா

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதுக்கு பிடித்த நபர்களை, அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நடிகை மெஹ்ரின் பிர்சாடா கூறியுள்ளார்.
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த மெஹ்ரின் பிர்சாடா ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘நோட்டா’, தனுஷ் ஜோடியாக ‘பட்டாஸ்’ திரைப்படங்களில் நடித்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இந்திரா' படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.
பல மொழிகளிலும் கலக்கி வரும் மெஹ்ரின் பிர்சாடா அளித்த பேட்டியில் கூறியதாவது, ”நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவள் என்றாலும், தமிழில் நான் கொண்டாடப்பட்டேன். முதன்முதலாக சென்னை வந்தபோதே, தமிழ் சினிமாவைப் பற்றி எனக்குத் தெரியும். இங்குள்ள ரசிகர்கள் மனதுக்கு பிடித்த நபர்களை, அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஜெயலலிதா, குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில் நானும் இணைய ஆசைப்படுகிறேன். தமிழ் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால், அவர்களை கோட்டையில் வைத்து கொண்டாடுவார்கள். ‘ரொமான்ஸ்' காட்சிகளில் நடிப்பதா? வேண்டாமா? என்பதை சூழ்நிலையும், கதையும்தான் முடிவு செய்யும். கதைக்கு தேவை என்றால் நடிக்க வேண்டியதுதான்” என்றார்.






