

சென்னை,
நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக சென்னையில் 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து வியந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்கில் நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நடிகைக்காகப் பட வெளியீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள உயரமான கட் அவுட் என்ற சாதனையையும் இது படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நடிகை ரெஜினா கேசண்ட்ரா கூறியதாவது:-
“இந்த நாள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு நடிகைக்காகப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக இவ்வளவு உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்துள்ளனர் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால், இந்தச் செயல் என்னை வியக்க வைக்கிறது. நான் ஆச்சரியத்தில் இருக்கிறேன்” என்று ரெஜினா கேசண்ட்ரா தெரிவித்துள்ளார்.