

பெங்களூரு,
ஐகோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததையும், செசன்ஸ் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்ததையும் தொடர்ந்து, தற்போது பவித்ரா கவுடா மீண்டும் ஜாமீன் கோரி வக்கீல் நாராயணசாமி மூலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்
ரேணுகாசாமி கொலை வழக்கில் தொடர்புடையதாக நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்பட்டனர். கடந்த ஓராண்டு காலமாக அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஐகோர்ட்டு அந்த ஜாமீனை ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பெங்களூரு 59-வது செசன்சு கோர்ட்டில் பவித்ரா கவுடா தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஐகோர்ட்டு ஜாமீனை ரத்து செய்ததையும், செசன்ஸ் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்ததையும் தொடர்ந்து, தற்போது பவித்ரா கவுடா மீண்டும் ஜாமீன் கோரி வக்கீல் நாராயணசாமி மூலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் உள்ள முக்கிய சாட்சிகள் அனைவரும் ஏற்கனவே சாட்சியங்களை அளித்துள்ளதாகவும், மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மேலும், அவர்கள் அளித்த சாட்சியில் பவித்ரா கவுடா மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என்றும், எனவே நிபந்தனைகளுடன் பவித்ரா கவுடாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவரது வக்கீல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதனால் இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.