ரேணுகாசாமி கொலை வழக்கு: தர்ஷன், பவித்ரா கவுடா காணொலி மூலம் ஆஜர்

நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, மற்ற குற்றவாளிகள் சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

ரேணுகாசாமி கொலை வழக்கு: தர்ஷன், பவித்ரா கவுடா காணொலி மூலம் ஆஜர்
Published on: 

பெங்களூரு,

ரேணுகாசாமி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறிய பிரதோஷ் 3 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார். அப்போது தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தர்ஷன் சிறையில் அடைப்பு

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ரேணுகாசாமி ஆபாச புகைப்படங்கள், தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால் கொலை நடந்திருந்தது. இந்த கொலை வழக்கில் தற்போது பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே ரேணுகாசாமி கொலையில் 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த தர்ஷனின் நெருங்கிய ஆதரவாளர் பிரதோஷ் அரசு சாட்சியாக மாறியுள்ளார். அவரை அரசு சாட்சியாக ஏற்க கூடாது என சிட்டிசிவில் கோர்ட்டு மற்றும் கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

காணொலி மூலம் ஆஜர்

அதே நேரத்தில் சிட்டிசிவில் கோர்ட்டும் அரசு சாட்சியாக மாறியுள்ள பிரதோசிடம் செப்டம்பர் 28-ந் தேதி (நேற்று முதல்) ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படும் என்று உத்தரவிட்டதுடன் அவருக்கு சம்மனும் அனுப்பி வைத்தது. அதன்படி, ரேணுகாசாமி கொலை வழக்கில் ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதற்காக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று காலையில் பலத்த பாதுகாப்புடன் பிரதோஷ் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அதுபோல், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, மற்ற குற்றவாளிகள் சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் பிரதோஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது வக்கீல்கள் மட்டுமே கோர்ட்டில் இருந்தனர். கோர்ட்டு கதவுகள் மூடப்பட்டு, பிரதோசிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

3 மணி நேரம் வாக்குமூலம்

அதாவது கடந்த 2024-ம் ஆண்டு சித்ரதுர்காவில் இருந்து ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்தது, அன்னபூர்ணேஷ்வரி நகர் அருகே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து ரேணுகாசாமியை சித்ரவதை செய்து கொலை செய்ததுடன், தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் ரேணுகாசாமியை தாக்கியது என அனைத்து தகவல்களையும் நீதிபதியிடம் பிரதோஷ் கூறினார். 3 மணிநேரத்துக்கும் மேலாக கொலை நடந்த நாளில் நடந்தது குறித்து அவர் விரிவாக வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் பிரதோசிடம் வாக்குமூலம் பெறுவதை நாளைக்கு (அதாவது இன்றைக்கு) ஒத்திவைத்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார். இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக அவரிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com