

பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ½ மாதங்களுக்கு முன்பாக இந்த கொலை வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. இதன் காரணமாக நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உள்பட 7 பேரும் கைதாகி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் தர்ஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடக்கும் ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை தாமதமாவதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தர்ஷன் கூறி இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. இன்றே ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தி உத்தரவிடப்படுமா?, அல்லது வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், தர்ஷன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், 'கடந்த 8½ மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கிறேன். சிறையில் எனக்கு ஏராளமான தொல்லை கொடுக்கப்படுகிறது.
குடும்பத்தினரை சந்திக்க அனுமதிப்பதில்லை. உணவு, ஆடைகள் வழங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் ஒரு நடிகனாக இருந்து வருகிறேன். ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களில் நடிப்பேன். தற்போது நான் சிறைவாசம் அனுபவிப்பதால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. நான் ஏற்கனவே நடிக்க ஒப்புக் கொண்ட சினிமா படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்' என்று மனுவில் தர்ஷன் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.