

பால்தாக்கரேயின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை அபிஜித் இயக்கி உள்ளார். பால்தாக்கரே வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். கதையை சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி எழுதி தயாரித்துள்ளார். படத்தில் அயோத்தி பிரச்சினை மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பால்தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டனர். விழாவில் சஞ்சய் ராவத் எம்.பி பேசும்போது, பால்தாக்கரேவின் வாழ்க்கையை அப்படியே படமாக எடுத்துள்ளோம். அரசியலையும் மக்களையும் பால்தாக்கரே எவ்வாறு கையாண்டார் என்பதை பதிவு செய்துள்ளோம். தணிக்கை குழுவினர் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த படத்துக்கு யாராலும் தடை விதிக்க முடியாது என்றார்.
படத்தின் டிரெய்லர் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்டர் பக்கத்தில், தென்மாநில மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை பேசும் வகையில் படத்தில் கருத்துக்கள் உள்ளன. இதுபோன்று வெறுப்புணர்வு பரப்புவதை தடுக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
படத்தை வெளியிட்டால் கலவரம் ஏற்படலாம் என்று தணிக்கை குழு அனுமதி வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது.