

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. இதற்கிடையில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மக்கள் தங்களுக்கு வேண்டிய தலைவரை தேர்ந்தெடுத்து வாக்களித்துவிட்டார்கள்; மக்களின் அந்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.