

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டி. இமான் இசையமைத்திருந்த இப்படத்தின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஊதா கலரு ரிப்பன்' உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. இந்த படம், சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தனி வரவேற்பை ஏற்படுத்திய முக்கிய படமாகவும் அமைந்தது.
இதற்கிடையில், இயக்குநர் பொன்ராம் சமீபத்தில் அளித்த பேட்டியல் , 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' திரைப்படத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்த நிலையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2' திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரியோ ராஜ், தனது ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ரியோ ராஜ் நடித்துள்ள 'ராம் லீலா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல், தனது ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் 'பிரவுன் மணி' என்ற புதிய திரைப்படத்தையும் அவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.