காந்தாரா பட வெற்றியை விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டாடிய ரிஷப் ஷெட்டி

காந்தாரா பட வெற்றியை அடுத்து நடிகர் மற்றும் இயக்குனரான ரிஷப் ஷெட்டி மும்பை சித்திவிநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டாடினார்.
காந்தாரா பட வெற்றியை விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டாடிய ரிஷப் ஷெட்டி
Published on

புனே,

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியானது.

ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படம் என்ற பெருமையை காந்தாரா பெற்று உள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து, பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

உடுப்பி பக்கம் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையையும், நம்பிக்கை துரோகம், வலியையும் வெளிப்படுத்தும் விதமாக மண்வாசனையோடு கலந்து கொடுத்திருந்த இந்த படம், இந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களாலுமே ஏற்று கொள்ளப்பட்டு விட்டது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நடிகர் ரிஷப் ஷெட்டி மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு இன்று காலை சென்று சாமி கும்பிட்டார். வரும் வழியில், ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் ஒன்றாக அவர் புகைப்படங்களையும் எடுத்து கொண்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பெல்பாட்டம் படம் ரிஷப் ஷெட்டியை கதாநாயகனாக உயர்த்தியது. இந்த நிலையில், தான் எழுதிய கதையில் நடித்து, இயக்கவும் செய்த காந்தாரா திரைப்படம், தென்னகம் மட்டுமின்றி இந்தி பேசும் மக்கள் இடையேயும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com