

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவான 'ஹனுமான்' படம் கடந்த 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் வர்மா, காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டியை வைத்து ஜெய் ஹனுமான் என்ற படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தினை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தாயரிக்க உள்ளன.
இந்த நிலையில், ஜெய் ஹனுமான் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. அதாவது, கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. இதனை டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.